வெற்றிப் பாதையில் மைக்ரோ சாஃப்ட் நிமிர வைத்த இந்தியர்


மைக்ரோ  சாஃப்ட் என்றதுமே நம் நினைவிற்கு வருவது பில்கேட்ஸ் என்ற பெயர் தானே! பல இளைஞர்களின் ஆதர்ச வழிகாட்டி அவர் தானே! தொழில் நுட்ப வளர்ச்சியில் தான் மனிதகுலத்தின் எதிர்காலமே அடங்கி இருக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் அனைவரும் அறிந்த பெயர் பில்கேட்ஸ் என்பது தானே.


மைக்ரோ சாஃப்ட் சாம்ராஜ்ஜியத்தின் உச்ச கட்ட வரலாற்றில், அதன் 30 ஆண்டு கால வெற்றிப் பாதைகளில் பில் கேட்ஸ் தவிர இரண்டே பேர் தான் இதுவரை அதன் முதன்மைச் செயல் அலுவலராக (சீப் எக்சிகியூட்டிவ் ஆபிசர் - CEO) இருந்திருக்கிறார்கள்.


சரிவில் மைக்ரோ சாப்ட்:


அந்த இரண்டு பேரில் ஒருவர் இந்தியரான சத்யா நாதெள்ளா என்பது நமக்கு எல்லாம் பெருமை தரும் செய்தி அல்லவா! தற்போது மைக்ரோசாஃப்டின் தலைவர் இந்தியரான சத்யா நாதெள்ளா. ஆந்தராவை பூர்விகமாகக் கொண்டவர்.


சரிவிலிருந்து மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தை தூக்கி நிறுத்திய பெருமை சத்யா நாதெள்ளாவையே சேரும். 2016 ஆம் ஆண்டிற்கு முன்பு சில ஆண்டுகளில் மைக்ரோசாஃப்ட் கடுமையான சூழலை சந்தித்தது. அதிலிருந்து மைக்ரோ சாஃப்ட் மீண்டு எழுமா என்ற கேள்வி கணினி உலகையே ஆக்கிரமித்திருந்தது.


ஆண்டிராய்டு மற்றும் ஆப்பிளுக்கு எதிரான விண்டோஸ் போன் வாடிக்கை யாளர்களிடையே எந்த விதமான வரவேற்பையும் பெறவில்லை.


குறிப்பாக உலகமெங்கும் கணினிகளின் பயன்பாடானது குறைவாகவும், ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகமாகவும் பரவத்தொடங்கிய காலகட்டம் அது.


மேகக் கணிமை என்கிற துறையின் தலைமை இடத்தை அமேசான் கைப் பற்றத் தொடங்கிய காலச்சூழல் அது. முக்கியமாக, தேடுதல் மற்றும் பிரவுசரில் கூகுள் முதலிடத்தினை ஆக்கியமித்துவிட்ட காலமும் அது தான்.


எப்பக்கம் நோக்கினாலும் புதிய நிறுவனங்களின் பரவல் தன்மையினால் மைக்ரோ சாஃப்டின் கோட்டைகள் ஒவ்வொன்றாக சரியத் தொடங்கிய கால கட்டமும் அது தான்.


நிலைமையை சமாளிக்க எத்தனையோ முயற்சிகளை மைக்ரோசாஃப்ட் முன்னெடுத்தாலும் அதனால் பெரிய எதிர் விளைவுகள் ஏற்படாத நிலையில் மைக்ரோ சாஃப்ட் திணறிப்போயிற்று.


வந்தார் சத்யா நாதெள்ளா:


 பில் கேட்ஸ் தலைமைப் பொறுப்பி லிருந்து விலகிய பின்னர் அந்தப் பொறுப்பை வகித்து வந்தவர் ஸ்டீவ் பால்மர். அவருடைய தொடர் முயற்சிகள் எதுவுமே பலன் தரவில்லை .


சரிவின் இறக்கத்தில் தொடர்ச்சியாக மைக்ரோசாஃப்ட் விரைந்த காரணத்தால் பங்குச் சந்தையில் மூன்றில் ஒரு பங்கு என்ற வீழ்ச்சியை நிறுவனம் தொட்டது.


அப்படிப்பட்ட ஒரு இக்கட்டான நிலைமையில் தான் சத்யாவைத் தேடி வந்தது தலைமைப் பொறுப்பு. அத்தகைய சூழலில் சத்யாவைத் தவிர வேறு யாராக இருந்தாலும், இந்தப் பொறுப்பை ஏற்க முன் வந்திருக்க மாட்டார்கள்.


காரணம் மணி மகுடத்தைத்தான் சுமக்க எல்லோரும் விரும்புவார்களே தவிர முள் முடியைச் சுமக்க எவர்தான் முன் வருவர்?


சவாலான பணிகளை ஏற்றே சாதிக்க விரும்பும் சத்யா நாதெள்ளாவிற்கு இது கரும்பு தின்னக் கிடைத்த வாய்பாக அமைந்தது. பொறுப்பை ஏற்றதும் நிர்வாக அணுகு முறையில் பலவீனங்களை படிப் படியாக வெகு விரைவில் சீரமைத்தார்.


அவர் பொறுப்பை ஏற்ற மூன்றே ஆண்டுகளில் சரிந்து கிடந்த மைக்ரோ சாப்ட் நிமிர்ந்து நிற்கிறது. வெற்றி தடத்தில் உலவுகிறது.


எவரெல்லாம் மைக்ரோ சாஃப்டிற்கு எதிரிகள் எனக் குறிப்பிடப்பட்டார்களோ அவர்களோடு இணைந்து பணியாற்ற லையும் தொடங்கினார் சத்யா. ஆப்பிள் ஐபேட்-ல் மைக்ரோ சாஃப்ட் ஆபிஸ் வேலை செய்யத் தொடங்கியது. ஆசூர் என்கிற மேக கணிமைத்துறைதான் உலகின் நம்பர் 2 இடத்தில் இருக்கிறது.


முக்கியமாக லினக்ஸ் என்கிற இயங்கு தளமே மைக்ரோசாஃப்டிற்கு எதிராகத் தான் 25 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப் பட்டது.சத்யா அதைமைக்ரோசாஃப்ட்டிற் குள் கொண்டு வந்து அதை ஆக்கபூர்வமான சாத்தியம் கொண்டதாகவும் மாற்றி உள்ளார். |


அவர் அசாத்தியமான போராட்டங் களைத் தனது செயல்பாடுகளால் வெற்றி கரமாகச் சாதித்து வந்த காலகட்டத்தில் தான் தனது சொந்த வாழ்க்கையிலும் மனரீதியிலான சோதனையே சந்திக்க வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது.



வாழ்க்கையும் களமானது:


அவருடைய மூத்த மகனான செயின் செரிபரல் பால்சி என்கிற மூளைக் குறைபாடுடைய குழந்தையாகப் பிறந்தான். பின்னாளில் அவனுடைய பார்வையும் முழுதாக பழுதானது.


மூத்த மகன் மட்டுமல்ல. அடுத்துப் பிறந்த பெண் குழந்தையான திவ்யாவும் அத்தகைய சிறப்பு கவனத்துக்குரிய குழந்தைதான். சத்யாவும் அவர் மனைவி அணுவும் தனது குழந்தைகளுக்கு அவர்கள் எந்தக் குறையும் உணராதவாறு பார்த்துப் பார்த்து வளர்ந்து வருகிறார்கள்.


திவ்யா போன்ற பெண் குழந்தைகளுக்கான பள்ளி கனடாவில் இருப்பதால் அங்கு சேர்ந்து விட்டிருக்கி றார்கள். கணவன் மனைவி இருவரும் காரில் எட்டு மணி நேரம் பயணம் செய்து மகளை வாரந்தோறும் அழைத்து வரு கிறார்கள். சவால்களை சந்திக்கத் தயங்காத சத்யா எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு அதற் கான ஆக்கபூர்வமான அணுகு முறைகளை மேற்கொள்ளத் தயங்காதவர்.


இலக்குநோக்கிய சாதனைகள்:


தன்னுடைய தொழில் நுட்பச் செயல்பாடுகள் அனைத்துமே மக்களின் பயன்பாட்டில் தான் வெற்றியை எட்டும் என்பதை உணர்ந்த காரணத்தால் அதை சரியாக இலக்கு நோக்கி நகர வைப்பதில் சாதித்தும் காட்யுள்ளார் சத்யா.


கார்ப்பரேட் நிறுவனங்கள் இலாப திட்டத்துடன் மட்டுமே இயங்குகின்றன என்பது தான் அவற்றின் மேல் பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டு. அதையும் தகர்த்தெறிந்திருக்கிறார் சத்யாநாதெள்ள. கேப்பிடலிசம் எனப்படும் முதலாளித்துவ வட்டத்திற்குள் இருந்து கொண்டே மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி இலாபம் பார்க்கலாம் என்பதையும் பலருக்கு உணர்த்தி உள்ளார்.


ஒரு உலகளாவிய நிறுவனம் என்பது வசதிகள் அனைத்தையும் அதன் நிறுவனர் தொடங்கி தலைவர்கள் அனைவரும் அனுபவிப்பார்கள் என்பது சாதாரணமானவர்களின் பார்வை . ஆனால் சத்யாவின் எளியவாழ்க்கை கற்பிக்கும் பாடமோ வேறு. கருணையும், கொடுக்கும் குணமும் அவரது சொத்து.


                                         


சத்யா கற்பிக்கும் பாடம்:


முக்கியமான மூன்றே ஆண்டுகளில் மைக்ரோசாஃப்டின் சரிவை வெற்றி சிகரத்தில் ஏறும் சாதனையாக மாற்றிக் காட்டியிருக்கிறார். உயர் தொழில் நுட்பங்களிலும் கணினியின் அடுத்தகட்ட சாத்தியங்களில் மைக்ரோ  சாஃப்டின் துடிப்பான பயணம் , தனது குடும்பம், தனது சிறப்புக் குழந்தைகளுக்கான அணுகு முறைகள் பற்றியும், தனது பார்வையிலான நூல் ஒன்றையும் எழுதியிருக்கிறார் அவர். 


அவர் எழுதிய புத்தகத்தின் பெயர் 'Hit Refresh, The Quest To Rediscover Microsoft's Soul and imagine a Better Future for Every One' சத்யா நாதெள்ளாவின் புத்தக முன்னுரையில் பில்கேட்ஸ் இப்படி எழுதி யுள்ளார்.


"சத்யா மாதிரியான நபர்கள் தான் தொழில் நுட்பத்தையும், மனித நேயத் தையும் எப்படி சரியாகக் கையாண்டு வெற்றிபெறுவது என்பதை புரிந்து கொண்டு அதை நமக்குக் கற்றுத் தரும் பாடமாக விளங்குகிறார்கள்”.


                                                                                                        - ஜே.கே.மாறன்.


|